Tuesday, December 18, 2007

"தோழர் ஸ்டாலின்" - வெல்லமுடியாத சகாப்தம்


ஜோசப் விசாரியோனோவிச் துகாஷிவிலி எனும் பெயருள்ள குழந்தை டிசம்பர் 18, 1879-ம் ஆண்டு ஜாரிஜியாவில் பிறந்தது. அந்த தாய்க்கு நான்காவது குழந்தையாக பிறந்தது அக்குழந்தை. முதல் மூன்று குழந்தைகளும் இறந்துவிட்ட நிலையில் பிறந்த விசாரியானோவிச் என்ற அக்குழந்தை சோவியத்தை கட்டிக்காப்பதற்காக தன் உயிரை பிடித்துவைத்திருந்தது என்று அப்போது அப்பெற்றோர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

பள்ளி படிப்பு முடித்ததும் பெற்றோர் விருப்பத்தின் பேரில் பாதிரியார் பயிற்சி பள்ளியில் சேர்கிறார் ஜோசப் விசாரியோனோவிச். அங்கே மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்டு தடைசெய்யப்பட்ட மார்க்சிய புத்தகங்களை படித்தார். அதன் காரணமாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஜாரை ஒழிப்பதற்கான செயல் வழியை கண்டறிய பயணிக்கிறார். 1899-ல் காக்கசசில் உழைக்கும் வர்க்கத்தின் அமைப்பாளராகிறார். தோழர் லெனின் கருத்துக்களால் ஈர்க்கப்படுகிறார். இப்போது அவர் பெயர் "கோபா"

1900-ல் ஜார்ஜியாவிலே முதன்முறையாக சட்டவிரோதமாக அறிவிக்கபட்டு இருந்த மே தினம் கோபா தலைமையில் நடத்தப்பட்டது. அடுத்த ஆண்டு 1901 மே தினம் கோபா அறிவித்தபடி மேலும் சிறப்பாக டி·ப்ளின் முக்கிய வீதிகளில் 2000 தொழிலாளர்கள் திரண்டு நடத்த முற்பட்டபோது போலீசாரால் சுற்றிவளைத்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் கோபா தப்பி தலைமறைவானார். இந்த சம்பவம் பற்றி லெனின் பேருவகை கொண்டு "டி·ப்ளிசில் ஏப்ரல் 22 சிறப்பு மிக்கதாகும். காக்கசஸில் வெளிப்படையாகப் புரட்சிகர இயக்கம் தொடங்கிவிட்டது என்பதையே இந்த நாள் குறிப்பிடுகிறது" என்று லெனினின் இஸ்க்ரா இதழ் அறிவித்தது.

1904-ல் பாகுவில் போல்ஷ்விக் கமிட்டியை அமைக்கிறார் அப்போதுதான் "தேசிய இனப்பிரச்சினையை சமூக ஜனநாயகம் புரிந்து கொள்வது எவ்வாறு" என்ற கட்டுரையை எழுதுகிறார். போல்ஷ்விக் கட்சியை தீவிரமாக கட்டுவதில் ஈடுபடுகிறார். 1912-ல் தோழர் லெனினை சந்திக்கிறார் கோபா. அப்போதுதான் கோபாவிற்கு "இரும்பு மனிதன்" எனும் பொருள் கொண்ட "ஸ்டாலின்" என்ற பெயர் சூட்டப்பட்டது. பாட்டாளி வர்க்கத்துடன் "ஸ்டாலின்" என்ற பெயர் இணைக்கப்பட்டது.

தோழர் லெனின் பல ஆண்டுகள் நாடு கடத்தப்படும், தலைமறைவாகவும் வெளிநாட்டிலிருந்தார். அவருடைய அனைத்து செயல்களும் ரஷ்யாவில் ஸ்டாலின் மூலமாகவே நடைமுறைப்படுத்தப்பட்டன. 1917 அக்டோபர் புரட்சி வெற்றிக்கு பின் லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கட்டியமைக்கப்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட வெளிநாட்டு தாக்குதல்களை முறியடித்த போதும் சோவியத்தை கட்டியமைப்பதிலும் லெனின் கொண்டிருந்த பங்கினை செயல்படுத்தியவரும் ஸ்டாலின் தான்.

1924-ல் லெனின் மறைவுக்கு பின் இளஞ்சோசலிசத்தை கட்டிக்காப்பதற்கான பொறுப்பை ஸ்டாலின் தன் தோளில் ஏந்திக்கொண்டார். பொருளாதாரத்தின் மிகவும் பின் தங்கி இருந்த ரஷியாவில் சோசலிச பொருளாதாரத்தை கட்டி உலகில் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றினார். அதற்கான ஐந்தாண்டு திட்டங்களை ஸ்டாலின் அறிவித்தபோது மேலை நாடுகள் இத்திட்டம் தேறாது என தூற்றினர். ஆனால் அடுத்தடுத்து ஐந்தாண்டு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி சோவியத் யூனியன் தன்னிறைவு அடைந்தபோது அதே மேலை நாடுகள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

உலகிலேயே முதலாவதும் மிகப் பெரியதுமான கூட்டுப்பண்ணைகளை உருவாக்கினார். வேலைக்கு உத்தரவாதம், அனைத்துக் குடிமக்களுக்கும் சமூக, பொருளாதாரப் பாதுகாப்பு, எழுத்தற்வின்மையின் முழுநீக்கம் போன்ற பயன்களுடன் உலகின் முதலாவது சோசலிச அமைப்பு முறையை உருவாக்கினார்.

முதலாளித்துவ நாடுகளிலிருந்து வெளிநாட்டு பிரதிநிதிகள் சோவியத் யூனியனிக்கு பயணம் செய்தனர். அந்தப் பயணத்தில் பிரம்மாண்டமான சோசலிசக் கட்டமைப்பினை கண்டு வியந்தனர். இந்தியாவில் இருந்து இரவிந்தநாத் தாகூர், கலைவாணர், பெரியார் என பலர் பயணம் செய்தனர். இதில் தாகூர் சென்ற போது, மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தை பரிசோதிப்பதற்கு ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்றார். தனது பேனாவைக்காட்டி " இதை ஐந்து ரூபாய்க்கு வாங்கி 10 ரூபாய்க்கு விற்றால் எனக்கு என்ன கிடைக்கும்" என்றார். உடனடியாக குழந்தைகள் "ஆறுமாதம் சிறை கிடைக்கும்" என்றனர். ஒரு பொருளை அதன் உள்ளடக்க விலையினை விட அதிகமான விலைக்கு விற்பது அங்கு குற்றமாக கருதப்பட்டது.

உலகம் முழுவதும் மாபெரும் வீழ்ச்சி ஏற்பட்ட காலத்தில் சோவிய யூனியனில் மட்டும் பொருளாதாரம் ஏறுமுகத்தில் சென்று கொண்டு இருந்தது.
.....
நாடுகள் -----------1929 ---- 1930 ----- 1931 ------ 1932 ------1933
..
அமெரிக்கா -----------100 -----. 80.7 ---- 63.1 ------- 59.3 -------64.9
பிரிட்டன் -----------100 ------ 92.4 ------ 83.8 ------ 83.8 -------- 86.3
ஜெர்மனி ----------100 ------- 88.3 ------- 73.7 ----- 59.8 -------- 66.8
பிரான்ஸ் ------------100 ------ 100.7 ---- 89.2 ------- 99.3 - ------- 77.4
சோவியத் யூனியன் -----100 ---- 129.2 ------ 161.9 ---- 184.7 -- ----- 201.6
..
-(ஜே.வி.ஸ்டாலின் - நூல்கள் தொகுதி 13 பக் 293)
டிராட்ஸ்கியவாதிகள், புகாரிகள் போன்ற ஏகாதிபத்திய உள்நாட்டு ஏஜெண்டுகள் செய்த சீர்குலைவு, பிளவு வேலைகளையும் முறியடித்தார்கள் சோவியத் மக்கள். இதனூடே, பாசிச இட்லரின் அல்லது பிற ஏகாதிபத்தியங்களின் இன்னுமொரு படையெடுப்பை எதிர்பார்த்து யுத்ததிற்கு சோவியத் நாட்டைத் தயார் செய்தார்கள்.

இரண்டாம் உலகப்போரின்போது ஸ்டாலின் வீரம் அசாதாரணமானது. மாஸ்கோவுக்கு 80 மைல் அருகாமையில் நாஜிப்படைகள் முன்னேறிக்கொண்டு வந்தபோது மாஸ்கோவிலேயே இருந்து போரினை வழிநடத்தி, பாசிச அபாயத்திலிருந்து உலகை காப்பாற்றிய அந்த தலைவரின் போர்குணத்தை முதலாளித்துவ தலைவர்கள் உட்பட பாராட்டாதவர்களே யாருமில்லை. உலகப் போரில் மற்ற நாடுகளை விட சோவியத் சந்தித்த இழப்புகள் சொல்லில் அடங்காதவை. இரண்டு கோடி மக்கள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். போரின் முடிவில் ஸ்டாலின் தலைமையில் சோவியத் எழுந்து நின்றது.

'கிரெம்ளினைக் கைப்பறுவேன்' என்ற கனவோடு, விரைந்த வெற்றி எனும் எதிர்ப்பார்ப்போடு வந்த இட்லருடைய இராணுவத்தின் இடுப்பொடித்து, பெர்லின்வரை அவர்களை விரட்டிச் சென்று வெற்றிக் கொடி நாட்டியது செஞ்சேனை.

இந்த சாதனைகளை நிகழ்த்த அம்மக்களை இயக்கிய சக்தி எது? கம்யூனிச சித்தாந்தமும், போல்ஷிவிக் கட்சித் தலைமையும் லெனின், ஸ்டாலின் ஆகிய தலைவர்களின் அரும் பெரும் ஆற்றலும் அல்லவா அச்சக்தி! பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் உயர்த்திப் பிடித்ததனால் உருவானதுதான் அச்சக்தி!

ஸ்டாலின் மறைவுக்கு பின் புரட்டல்வாதிகளும், ஏகாதிபத்திய கைக்கூலிகளும் அவருக்கு எதிராக அவதூறுகளை அள்ளிவீசினர். இன்று தன்னால் வளர்க்கப்பட்ட சதாம் உசேனை அழிப்பதற்க்கே எத்தனை எதிர்பிரச்சாரத்தை அமெரிக்கா முதாலான ஏகாதிபத்தியங்கள் மேற்கொள்ளும் போது முதலாளித்துவத்தின் இருப்புக்கே உலைவைத்த சோசலிச அரசான சோவியத் யூனியனை அழிப்பதற்காக என்ன செய்திருக்ககூடும் என்பதை அவர் அவர் சிந்தனைக்கே விட்டுவிடலாம். .

ஏகாதிபத்தியங்களில் அடுத்தடுத்த நெருக்குதலினால் ஸ்டாலின் தடுமாறினார் என்பது உண்மைதான். 1936-ல் எதிரி இருப்பதை கவனத்தில் கொள்ளாமல் அனைவருக்கும் சம உரிமை என்ற சட்டத்தை கொண்டு வருகிறார். இதனால் மிக அதிகமாக பிற்போக்கு வாதிகள் கட்சியில் ஊடுருவுகிறார்கள். இதை 1937-லேயே உணர்ந்து விழிப்போடிருக்குமாறு எச்சரிக்கிறார். துரோகிகளை ஒழிக்கும் பொறுப்பு போலீசின் உளவுதுறையிடம் கொடுக்கப்பட்டது. அதனிடத்திலேயே துரோகிகள் வந்துவிட்டதால் சில தவறுகள் நிகழ்கின்றனர்.
..
ஆனால் துரோகிகளை இனம் காண, மக்களிடமே அதனை கொண்டு சென்று அகற்றி இருக்க முடியும். தவறு ஏற்படாமல் இருப்பதற்க்கு அளிக்கப்பட்ட காலத்தை விட அதனை களைவதற்கு ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட காலம் மிக குறைவு. ஸ்டாலின் மீதான நமது விமர்சனமும் இந்த அடிப்படையிலே இருக்கிறது.மற்றபடி ஏகாதிபத்திய ஏஜென்டுகளிடமும் கட்சிக்குள் ஒளிந்திருந்த முதலாளித்துவ பாதையாளர்களிடமும் இரக்கம் காட்டாததற்குத் தான் ஸ்டாலினை கொடுங்கோலன் என்று ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களது எடுபிடிகளும் சித்தரிக்கிறார்கள். ஆனால், அதற்காக நாம் பெருமைப்படுகிறோம்.

ஸ்டாலினுக்கு பின் அவர் உருவாக்கிய சோசலிச கட்டமைப்பினை உடைக்க, முதலாளித்துவ மீட்சியினை கொண்டு வர 40 ஆண்டுகள் ஆனது என்றால் அதன் பலத்தினை அறிந்து கொள்ளலாம்.1953-ல் ஸ்டாலின் இறந்தவுடன் குருசேவால் ஆரம்பிக்கப்பட்ட அழிவு வேலை 1990-ல் ஒரு குலாக்கின் பேரனான எல்ட்சினால் முடித்து வைக்கப்பட்டது.

1956-ஆம் ஆண்டிலிருந்து குருஷேவ்வாதிகளால் ஸ்டாலின் பற்றி நம்மீது திணிக்கப்பட்ட கருத்து, சோவியத் யூனியனில் முதலாளித்துவப் பாதையை அமைக்க விரும்பிய வர்க்கத்தினரின் கருத்து. இதேபோல முதலாளித்துவ மோசடிக்காரர்களால் சித்தரிக்கப்பட்ட ஸ்டாலின் பற்றிய சித்திரமும், முதலாளித்துவ சுரண்டல் முறையையும், ஒடுக்குமுறையையும் பாதுகாக்க விரும்பிய வர்க்கத்தின் சித்திரம்தான்.

உண்மையான ஸ்டாலினை, வரலாற்று நாயகன் ஸ்டாலினைக் காண வேண்டும் என்றால், உழைக்கும் வர்க்கக் கண்களால், ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்ட வர்க்கத்தின் கண்களால், மார்க்சிய -லெனினியக் கண்களால் காண வேண்டும்.

சோசலிச அரசின் போது சோவியத் யூனியன் முழுவதும் தன்னிறைவு பெற்று இருந்தது, ஆனால் தற்போது முதலாளித்துவ மீட்சிக்கு பின் அங்கு வறுமையும், விபச்சாரமும், மாபியா கும்பலும் என தலைவிரித்தாடுகின்றன. 1990-ல் 64 ஆக இருந்த சராசரி வயது 2003-ல் 58 ஆக குறைந்துள்ளது. ரஷ்யாவில் ஒரு சதவீத மக்கள் நாட்டின் 80 % சொத்துகளையும், 50 % வருமானத்தையும் கையகப்படுத்தியுள்ளனர். மக்களுக்காக இருந்த தொழிற்சாலைகள், கருவூலங்கள் மாபியா கும்பலிடம் சிக்கிவிட்டன. மக்களில் பெரும்பான்மையோர் ரொட்டிக்காக பிச்சைக்காரர்களை போல திரிய வைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு 90 % மக்களுக்கு வேலை இல்லை.

எச்.ஐ.வி ஆல் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய ஐ.நா அறிக்கையில்: சோவிய யூனியனில் 1991-ல் இந்நோய் ஆல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10000. இன்று அதன் எண்ணிக்கை 15 லட்சமாக உயர்ந்துள்ளது. முதலாளித்துவ மீட்சிக்கு பின் மக்கள் படும் துன்பங்களை இந்த புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றனர்.முதலாளித்துவத்திற்கு மாற்றாக மார்க்சியம் மட்டுமே இருக்க முடியும் என்பதை எடுத்துரைக்கின்றன.

மார்க்சிய -லெனினியத்தை ஆட்சியிலிருந்து இன்று நீக்கியிருந்தாலும் அதன் ஒளி முன்னெப்போதைக்காட்டிலும் தற்போது உலகம் முழுவதும் வீச்சாகவே உள்ளது. பாட்டாளி வர்க்கம் சோசலிசத்தின் வெற்றிகளை நேர்மறை அனுபவமாக எடுத்துக்கொண்டதைபோல, முதலாளித்துவ மீட்சிக்கான காரணத்தை எதிர்மறை அனுபவமாக எடுத்துகொண்டு உள்ளது.

உலக பாட்டளி வர்க்கம் தன் வெற்றிகளை சாதித்து வர்க்கமற்ற சமூகத்தினை, கம்யூனிசத்தை அமைக்க போவது காலத்தின் கட்டாயம் என்பதைப்போல அதனுடன் முதல் சோசலிச அரசை நிறுவிய தோழர் ஸ்டாலின் பெயரும் வெல்லமுடியாத சகாப்தமாக இணைந்தே இருக்கும்.

1 comment:

அசுரன் said...

இது போன்ற கட்டுரைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் மறு பிரசூரம் செய்யலாம். ஏனேனில் இந்த கட்டுரைகள் காலத்தின் தேவையாய் எப்பொழுதும் இருக்கின்றன.

அசுரன்

இணைப்பு