கொள்ளைக்குக் காவல் ஏன்?
நல்ல மருத்துவ வசதிகளாகட்டும் அல்லது மருத்துவப் படிப்பாகட்டும், அவை என்றுமே காசு உள்ளவருக்கு மட்டுமே சொந்தமாக உள்ளது. சமீபத்தில் கூட சென்னைக்கு அருகில் கெளம்பாக்கத்தில் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையுடன் புதிதாக ஒரு மருத்துவ நகரையே உருவாக்கியுள்ளனர் செட்டிநாட்டு ராஜ பரம்பரையினர். 100 மைல் பரபளவில் நவீன வசதிகளுடன் கூடிய இந்த நகரைக் கருணாநிதி திறந்து வைத்துள்ளார். இந்த மருத்துவ நகரை இவர்கள், ஏதோ ஏழைகளுக்குச் சேவை செய்வதற்காகக் கட்டியது போல கருணாநிதி பேசியுள்ளார்.
நோயாளிகளைக் கசக்கிப் பிழிந்து அவர்களிடம் கொள்ளையடிப்பதற்காகவும், மருத்துவம் படிக்க வரும் மாணவர்களிடம் கட்டணக் கொள்ளையடித்துக் கோடி கோடியாகச் சம்பாரிக்கவுமே இந்த நகரை இவர்கள் கட்டியுள்ளனர். இதே மருத்துவக் கல்லூரி அண்ணாப் பல்கலைக் கழகம் மூலம் தேர்ந்தேடுக்கப்பட்டுக் குறைந்த கட்டணத்தில் படிக்க வந்த மாணவகளைச் சேர்த்துக்கொள்ள முடியாது என்றும் தாங்கள் பல லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு மாணவர்களைச் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்று கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டுதான் கல்லூரியில் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்த லட்சணத்தில் இவர்களுக்குக் கல்வி வள்ளல் பட்டம் வேறு.
தரமான கல்வியையும், மருத்துவ வசதிகளையும் மக்களுக்கு அளிக்கும் பொறுப்பிலிருந்து முற்றிலும் விலகிவிட்ட இந்த அரசு அந்தப் பொறுப்பை இந்தக் கொள்ளைக் கும்பலிடம் கொடுத்துள்ளது. இதே மேடையில் கருணாநிதி பேசுகிறார், அனைவருக்கும் தரமான மருத்துவ வசதிகளை அரசால் தர முடியாதாம் ஆதலால் இது போன்ற தனியார் நிறுவனங்கள் அந்தப் பொறுப்பை ஏற்க முன் வர வேண்டுமாம். பாலுக்குப் பூனையைக் காவல் வைத்த கதையாகத் திருடனிடமே காவல் பொறுப்பை ஒப்படைக்கிறார்.
No comments:
Post a Comment