ராமன் பாலம் - தமிழகத்தை குஜராத்தாக மாற்ற முயலும் இந்துமதவெறியர்கள்
குஜராத்தை இந்துத்துவத்தின் சோதனைச் சாலையாக்கி இந்துமதவெறியாட்டம் போட்ட இந்துத்துவ பயங்கரவாதிகள் தமிழ்நாட்டையும் குஜராத்தாக மாற்றிடத் துடித்துக் கொண்டிருக்கின்றனர். கலவரத்தைத் தூண்டிவிட அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள விசயம்தான் 'ராமன் கட்டிய பாலம்'. இந்து மதவெறிக்கும்பலின் இச்சதித் திட்டத்திற்கு கூட்டாளிகளாக காங்கிரசு,அதிமுக உட்பட பல்வேறு ஓட்டுப்பொறுக்கிகளும் இன்றைக்குக் கைகோர்த்து நிற்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாடே இந்துமதவெறிப் பாசிசத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறது.
பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டு வரும் இந்தியாவில் இருந்து சுரண்டப்படும் செல்வத்தை அதிவிரைவாக எடுத்துச் செல்வதற்கென்றே உருவாக்கப்படுபவைதான், துறைமுகங்களை உள்நாட்டுடன் இணைக்கும் நாற்கரச் சாலைகளும், சேதுக்கால்வாய் திட்டமும் என்பதனை நாம் ஏற்கெனெவே சுட்டிக்காட்டி இருக்கிறோம்.
அந்நியனுக்கு சேவை செய்ய என்றே உருவாக்கப்படும் சேதுக்கால்வாய் திட்டத்திற்காக 'ராமர் கட்டிய பாலத்தை இடிக்காதே' என வெறிக்கூச்சல் போடுதன் மூலம், தமிழ்நாட்டை, குஜராத் போன்ற கலவரபூமியாக்க இந்து பாசிசக் கும்பல் பலமுனைகளிலும் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது.
பாக் நீர்ச்சந்தியில் தற்போது ஆழப்படுத்தப்பட்டு வரும் பகுதியில் 'இந்துக்களின் புராதனச் சின்னமான இராமர் பாலத்தை இடிப்பதைத் தடுக்க வேண்டுமென'க் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன்சாமி உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் மத்திய அரசின் தரப்பில் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை உச்சநீதிமன்றத்தில், ராமர் பாலம் எனும் பகுதியானது இயற்கையாக உருவான மணல் திட்டுதான் என்றும், ராமர்,ராமாயணக் கதாபாத்திரங்களுக்கும், ராமர்-ராவண யுத்தத்திற்கும் சான்றுகள் இல்லை என்றும் அறிக்கை தாக்கல் செய்தது.
உடனே பாஜகவில் இருந்து விஷ்வ இந்து பரிசத் வரை இந்து பாசிசக் கும்பல் 'மத்திய அரசு தெரிவித்துள்ள கருத்துக்கள், தெய்வ நிந்தனை; இந்துக்களின் மத நம்பிக்கை மீதான தாக்குதல்' என்றும் இதற்காக ஆளும்கட்சி மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்றும் கூச்சல் போட ஆரம்பித்தது.
மதவெறி மூடத்தனம், பாஜகவுக்கு மட்டும்தான் சொந்தமா? எனப் போட்டி போட்டுக்கொண்டு 'ராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய சின்னமாக அறிவித்து, சேதுக்கால்வாய் திட்டத்தில் இருந்து பாலத்தைக் காக்க வேண்டும்' என உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றம் சென்றார், திராவிட இயக்கத்தின் புதிய பரிணாம வளர்ச்சியான, ஜெயலலிதா.
தொல்லியல் ஆய்வுத்துறை , அறிவியல்பூர்வமாகச் செயல்பட வேண்டிய தனது கடமையைச் செய்ததைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாத பாசிஸ்ட் ஜெயலலிதாவோ 'ராமர் பாலத்தை இயற்கையாய் உருவானது என்று சொல்லியதன் மூலம் மதச்சார்பற்ற அரசு எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் தகுதியை மத்திய அரசு இழந்து விட்டதாக'த் திமிரோடு பேசினார். ராமர் பாலம் கட்டியதாகச் சொன்ன அண்டப்புளுகைத் தோலுரிப்பது மதச்சார்பின்மைக்கு எதிரானதாம். மதச்சார்பின்மையின் அர்த்தத்தையே புரட்டிப்போடுகிறார், தன்னைப் 'பாப்பாத்தி' எனப் பெருமையோடு அறிவித்துக்கொண்ட இந்துமதவெறி ஜெயா.
இந்த எதிர்ப்புகளை சாக்காக வைத்து, ஒரே நாளில் காங்கிரசு அரசு பல்டி அடித்து, தொல்லியல் துறை தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து ராமர் பற்றிய பகுதிகளைத் திரும்பப்பெற்றுக் கொண்டது. அறிக்கை தயாரித்த அதிகாரிகள் இருவரை இடை நீக்கம் செய்தது.
அத்துடன் நில்லாமல் காங்கிரசுக் கட்சி தனது சட்ட அமைச்சர் பரத்வாஜ் எனும் பார்ப்பனரின் வாயாலேயே "இமயமலை இமயமலைதான்.கங்கை கங்கைதான்.ராமர் ராமர்தான்.இதற்கெல்லாம் ஆதாரங்கள் ஏதும் தேவையில்லை.இந்துக்களின் வாழ்வில் ராமர் பிரிக்க முடியாத ஓர் அங்கம். இது விவாதிக்க வேண்டிய விசயமில்லை" என ஒரே போடாகப் போட்டு, தாமும் இந்து மதவெறிக் கட்சிதான் என்பதை நிரூபித்துள்ளது. காங்கிரசின் இந்து மதவெறி இப்படி அப்பட்டமாக வெளிப்பட்ட பின்னரும் கூட சிபிஎம்-மும், சிபிஐயும் இன்னமும் காங்கிரசுக் கயவாளிகளை மதச்சார்பற்ற சக்திகள் எனக் கூறிக்கொண்டு அவர்களை ஆதரிக்கின்றன.
பாஜக,காங்கிரசு,அதிமுக வரிசையில் 'இந்துக்களின் மனதைப் புண்படுத்தக்கூடாது' என்று தேமுதிகவும், புதிய கடை ஆரம்பித்து அரசியல் வியாபாரம் ஆரம்பித்திருக்கும் சரத்குமார், விஜய டி ராஜேந்தர் வரை அனைத்து கழிசடைகளும் இந்து மதவெறி சாக்கடையில் புரள ஆரம்பித்து விட்டனர். அதாவது பாலம் உருவான அறிவியல் உண்மையைக் கூறினால் அது இந்துக்களின் மனதைப் புண்படுத்தி விடுமாம். பிற்போக்குவாதிகளான இவர்கள்தான் இப்படிச் சொல்கிறார்கள் என்றால் காம்ரேடுகளும் அதே கழிசடைச் சிந்தனையை வேறு வார்த்தைகளில் 'மத்திய அரசு அறிக்கையை திரும்பப்பெற்றது சரியான செயல்தான்' என்றும் 'பிரச்சினைக்கு சம்பந்தமில்லாமல் ராமர்,ராமாயணத்தை குறித்து எல்லாம் கருத்துத் தெரிவித்தது சரியல்ல' என்றும் அறிக்கை விட்டிருக்கிறார்கள்.
அறிவியல்பூர்வமான சிந்தனையை வளர்த்தெடுத்து, சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெறிவதே உண்மையான கம்யூனிஸ்ட்டுகளின் கடமையாகும். ஆனால் தொல்லியல்துறை அறிக்கையை எதிர்ப்பதன் மூலம், ராமர் பால மூடக்கதைக்குத் துணை போய், சிபிஎம்மும் மதவெறியைத்தாண் ஆதரிக்கின்றது. பின்னர் எதற்கு இவர்கள் இன்னமும் தங்கள் கட்சியின் பெயரில் கம்யூனிஸ்ட் எனும் வார்த்தையை ஒட்ட வைத்துள்ளார்கள்?
வட இந்தியா எங்கிலும் ராமர்-ஜென்ம பூமி, ரத யாத்திரை என்ற தந்திரங்கள் மூலம் தனது அடித்தளத்தை அமைத்துக்கொண்ட சங்க பரிவாரத்திற்கு தென்னிந்தியாவில் வேரூன்ற சரியான முகாந்திரத்தை ராமன் பாலம் கதை தந்திருக்கிறது. தமிழகத்தில் தனது இயக்கத்தைக் கட்டுவதில் சிரமம் இருக்கிறது என்பதை பிரவீண் தொகாதியாவே ஒத்துக்கொள்கிறார். அதற்காக வெகு நுட்பமாகத் திட்டமிட்டு மதவெறியைப் பரப்புவதில் சங்கபரிவாரம் முயற்சிக்கிறது.
எழுபதுகளில் இருந்து விவேகானந்தர் பாறை, மண்டைக்காடு கலவரம், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் போன்ற தந்திரங்கள் மூலம் பையப் பைய வேர் பிடித்து வரும் இந்து மத வெறி கும்பல் ராமன் பாலம் சர்ச்சையைக் கிளறி விட்டு தமிழகத்தை இன்னொரு குஜராத்தாக மாற்ற முயற்சிக்கிறது.
இதனைப் பிரச்சாரமாக எடுத்துச் செல்ல யாகங்கள், பூசைகள் செய்வதுடன் மக்களைத் திரட்டிப் போராடுவதும், நீதிமன்றங்கள் மூலம் பிரச்சாரம் என்று மும்முனைத் திட்டம் வகுத்து செயல்படுகிறது.
முன்னாள் தேர்தல் கமிசனர் கிருஷ்ணமூர்த்தி, ராமநாதபுரம் மன்னர் சேதுபதி, முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சுந்தரம் அடங்கிய நிபுணர் குழு ஒன்றை அமைத்து ராமர் பாலத்தைக் காக்க மாநாடுகள், உண்ணாவிரதங்கள், சாலை மறியல் என்று முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறது.
இதற்காக தினசரி ஒரு புளுகை அவிழ்த்து விட்டு வருகிறார்கள். இலங்கையின் நிலப்பரப்பு குறுக்காக அமைந்திருப்பதால்தான் மன்னார் வளைகுடாவை சுனாமி தாக்கவில்லை எனும் அறிவியல் உண்மையை மறைத்து, 'ராமர் பாலம்தான் தென் தமிழகத்தை சுனாமியில் இருந்து காத்தது' என்று கதை அளந்தார்கள்.
ராமர் பாலத்தை உடைத்தால் அடுத்த 1000 வருசங்களுக்கு தேவைப்படும்-அங்கு புதைந்து கிடக்கும்- தோரியம் கரைந்து விடும் என அரைகுறை அறிவியலைக் கலந்து பிரச்சாரம் செய்தார்கள். அப்பகுதியில் தோரியம் இருப்பது உண்மையாகவே இருப்பினும், தோண்டாமலே தோரியத்தைப் பிரித்தெடுக்க இயலுமா? மேலும், கரைந்து போக, தோரியம் என்ன உப்பா,சர்க்கரையா?
தனது முட்டாள்தனமான கதைக்கு எதை வேண்டுமானாலும் பேசலாம் எனக் கருதிக்கொண்டு, தோரியக்கதையில் சர்வதேசப் பிரச்சினையையும் சேர்த்து பிரச்சாரம் செய்தார்கள். "இந்தியாவுக்கு தேவையான தோரியத்தை கிடைக்கவிடாமல் செய்ய ராமர் பாலத்தை இடிக்க அமெரிக்கா சதி செய்கிறது" என்று விஷ்வ இந்து பரிஷத் அமெரிக்க எதிர்ப்பு வேசம் கட்டிப் பார்த்தது.
அமெரிக்க சதி பற்றிப் பேசும் இவர்கள், சேதுக்கால்வாய்க்குள் அமெரிக்கக் கப்பல்கள் நுழையக்கூடாது என்று என்றைக்குமே போராடப் போவதில்லை. போராடுவது கிடக்கட்டும். நிமிட்ஸ் கப்பல் சென்னையில் நங்கூரம் பாய்ச்சி, கோடம்பாக்கத்துத் துணைநடிகைகளுடன் காமக்களியாட்டங்களில் ஈடுபட்ட அமெரிக்க வீரர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுத்தபோது இந்த அமெரிக்க எதிர்ப்புப் போராளிகள் எங்கே புடுங்கிக் கொண்டிருந்தார்கள்?
இந்துமத வெறி பாஜகவால் ஆரம்பிக்கப்பட்டு, காங்கிரசால் முழுமையாக்கப்பட்டு உள்ள அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கும் இந்துத்துவ பாசிஸ்ட்கள், தோரியத்தை கிடைக்கவிடாமல் அமெரிக்கா சதி செய்வதாகப் புளுகுகிறார்கள்.
'ராமர் பாலம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதற்கெல்லாம் ஆதாரம் கேட்டுக்கொண்டிருக்க முடியாது' என்கிறார் இல.கணேசன்.இதே 'நம்பிக்கை' வாதத்தைத்தான் பாபர் மசூதி விவகாரத்திலும் சொன்னார்கள். பால்யவிவாகமும் நம்பிக்கைதான். உடன்கட்டை ஏறுதலும் நம்பிக்கைதான். தீண்டாமையும் இந்துக்களின் நம்பிக்கைதான். அவற்றை எல்லாம் எதிர்த்தால் இந்துக்களின் மனம் புண்படுமே என்று கருதி இந்தக் காட்டுமிராண்டித்தனத்திற்கு சொறிந்து கொடுக்கவா முடியும்?
தமிழ்நாட்டில் தனது சதிச்செயலை அரங்கேற்ற போதுமான அடியாள் படை இல்லாததால் வேறு மாநிலங்களில் இருந்து இந்துமதவெறியர்களை இறக்குமதி செய்து மாநாடுகளை நடத்துகின்றனர். ராமர் பாலப் பாதுகாப்பு மாநாட்டுக்கென்று ஆந்திரத்திலிருந்து வந்த கும்பல் ரயிலில் பயணச்சீட்டு எடுக்காமல் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறி வந்தனர். ரயில்வே அதிகாரிகள் பயணச்சீட்டைக் கேட்டபோது "ராமர் பாலத்தைக் காக்கப்போகும் நாங்கள் ஏன் டிக்கெட் எடுக்க வேண்டும்?" எனக் கேட்டு ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து மறியல் செய்தனர். உடனே ரயில்வே போலீசோ அவர்களிடம் சமாதானம் பேசி அடுத்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில்களில் அவர்களைப் பாதுகாப்பாய் ஏற்றி அனுப்பி வைத்தது. மத வெறியர்களுக்கு வால்பிடித்த ரயில்வே போலீசு, புறநகர் ரயில்கள் ரத்தானதைக் கண்டித்து அதே வாரத்தில் நியாயமாகப் போராடிய பயணிகளைக் கைது செய்து 18 மணி நேரம் சிறையில் அடைத்தது என்பதில் இருந்தே அரசு எவ்வாறெல்லாம் இந்துவெறிக்குத் துணைபோகின்றது என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
பாஜகவை விட்டு விலகி தனி அமைப்பு கண்ட உமாபாரதி தமிழ்நாட்டுக்குள் வந்து 'ராமர் பாலத்தைக் காக்கப் போராடும் தன்னை முடிந்தால் கருணாநிதி கைது செய்து பார்க்கட்டும்' என்று கொக்கரிக்கிறார். கருணாநிதியோ 'இதை எல்லாம் என் வாழ்நாளிலேயே காண வேண்டியிருக்கிறதே' எனப் புலம்புகிறார். அவரின் வீரம் என்ன என்பதை இல.கணேசனே 'பாஜக தயவு கருணாநிதிக்கு தேவைப்பட்டால் அவர் ராமர் பாலத்தை இடிக்க விடாமல் காப்பார்' என்று போட்டுடைக்கிறார்.
இன்று பெரியார், பகுத்தறிவு என்று அறிக்கை விடும் கருணாநிதி ஆறாண்டு பாஜக ஆட்சியின்போது அது நடைமுறைப்படுத்தி வந்த சோதிடக்கல்வி, மதவெறி கலந்த பாடத்திட்டம், குஜராத் படுகொலை என அனைத்து அராஜகத்திலும் மவுனப்பங்காளியாகச் செயல்பட்டவர்தான்.
திடீரென்று ராமர்பாலத்தைக் காக்கப் போவதாக பாஜக ஏன் பேச ஆரம்பிக்கின்றது? என்பதை அறிந்து கொள்ள, மூளையைக் கசக்க வேண்டியதில்லை. விஷ்வ இந்து பரிஷத்தின் தலைவர் வேதாந்தத்தின் "மக்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தி ராமர் பாலம் இடிக்கப்படுமானால் வரும் தேர்தலில் தக்க பாடம் கற்பிக்கப்படும்" எனும் அறிக்கையில் இதற்கான பதில் உள்ளது.
நடந்து முடிந்த உ.பி. தேர்தலில் மூன்றாம் இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்த பாஜகவுக்கு வரப்போகும் குஜராத் தேர்தலுக்கும், ஒருக்கால் இடதுசாரிகளால் மைய அரசு கவிழ்க்கப்பட்டு வரப்போவதாக எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றத்தேர்தலுக்கும் பிரச்சாரம் செய்யக் கிடைத்த நல்வாய்ப்பாகவே ராமன்பாலம் அமைந்திருக்கிறது.
அரசியல் சாசனத்தின் 51ஏ பிரிவின்படி அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டியது இந்தியக்குடிமகனின் கடமை என்று தெளிவாக்கப்பட்டிருப்பினும், அறிவியலுக்குப் புறம்பாக காங்கிரசு அரசு செயல்பட்டு அரசியல் சாசனத்துக்கு எதிராகச் செயல்பட்டு இந்து மதவெறியைக் கிளறி இருக்கின்றது. ராமர் பாலம் விவகாரம் மட்டுமல்ல, பாபர் மசூதி இடிப்பு, அது சம்பந்தமாய் அமைக்கப்பட்ட லிபரான் கமிசனின் ஆயுளை நீட்டிக்கொண்டே செல்வது, மும்பைப் படுகொலைகள் குறித்த ஸ்ரீகிருஷ்ணா கமிசனின் அறிக்கையை அமலாக்காமல் இருப்பது என அனைத்து விசயங்களிலும் பாஜக விற்கும், காங்கிரசுக்கும் கொஞ்சம் கூட வேறுபாடு கிடையாது. இந்து மதவெறி காங்கிரசை ஆதரிப்பதன் மூலம் போலி கம்யூனிஸ்ட்களும் இந்துத்துவ பயங்கரவாதத்துக்கு அடியாள் வேலை செய்து வருகின்றனர்.
123 அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் அப்பட்டமாய் அம்பலமாகிப் போயுள்ளது காங்கிரசுக் கட்சி. அவ்வொப்பந்தத்தை எதிர்ப்பது போல நாடகமாடி வரும் பாஜகவும் இதில் அம்பலமாகியுள்ளது. மக்கள் மத்தியில் இவ்வொப்பந்தம் பேசும் பொருளாகி மறுகாலனியாக்கம் பற்றிய சர்ச்சை சூடுபிடித்து வரும் இந்த சூழலில் அணுசக்தி ஒப்பந்தப் பிரச்சினையை மக்கள் மறந்து, 'ராமன் பாலம் கட்டினானா? இல்லையா?' என்று அவர்களை விவாதிக்கவிட்டு அதில் கிளறப்படும் மதவெறியில் குளிர்காய காங்கிரசும்,பாஜகவும் மட்டுமன்றி சகல ஓட்டுக்கட்சிகளும் முயன்று வருகின்றன.
அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் அம்பலப்பட்டுள்ள இக்காலகட்டத்தில், அமெரிக்க உளவாளியும், டங்கல் ஒப்பந்தத்தின் செயல் தலைவனாகச் செயல்பட்டவனுமான சுப்பிரமணிய சாமியால் ராமர் பாலப் பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளதென்பது தற்செயலாக இருக்க முடியாது.
1990களின் ஆரம்பத்தில் மறுகாலனியாக்கத்தின் தொடக்கமாக காட் ஒப்பந்தத்தில் காங்கிரசு அரசு கையொப்பமிட்டு தாராளமயம்,உலகமயத்தை ஆரம்பித்து வைத்தபோது மக்கள் விழிப்புற்று விடாதிருக்க அப்போது பாஜகவும் காங்கிரசும் 'ராமர் கோவிலை பாபர் இடித்தாரா இல்லையா' என்ற விவாதத்தில் மக்களை மூழ்க வைத்து மதரீதியில் மக்களைப் பிளந்தன. காலங்காலமாய் பிரிட்டிஷ் காரன் செய்து வந்த அதே பிரித்தாளும் தந்திரத்தை இன்றும் கடைப்பிடிக்கின்றன.
'ராமன் பாலப் பிரச்சினை' என்பது பெருவாரியான இந்துக்களின் பிரச்சினையே அல்ல. இல்லாத ராமன் பாலத்தைப் பேசவைத்து தமிழ்நாட்டில் மதக்கலவரத்தைத் தூண்ட பாஜக திட்டமிட்டு செயல்படுகிறது. அதனுடன் கூட்டாளிகளாக ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார் என சகலவிதமான கழிசடைகளும் கைகோர்த்துள்ளனர்.
பெரியாரின் வாரிசுகளாகக் கூறிக்கொள்பவர்கள் இந்த சதியை எவ்வாறு முறியடிக்கப் போகிறார்கள்?
ராமர் பாலம் பற்றி கருணாநிதி விமர்சித்தவுடன் இந்துத்துவ பயங்கரவாதிகள் கருணாநிதியின் மகள் வீட்டைத்தாக்கியுள்ளனர். தமிழக அரசுப் பேருந்தைக் கொளுத்தி 2 பேரை உயிருடன் கொளுத்தி நரவேட்டை நடத்தி உள்ளனர். இவ்வளவு தூரம் போன பின்னரும், ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தபோதிலும், இம்மதவெறிக்கும்பலை கருணாநிதி அடக்கி ஒடுக்கத் தயங்குகிறார்.
காங்கிரசின் போலி மதச்சார்பின்மை சாயம் வெளுத்துப்போய் அதன் இந்து மதவெறி அம்பலமான பின்னரும் இரண்டு போலிகளும் காங்கிரசை ஆதரிப்பதன் மூலம் பாஜகவை தனிமைப்படுத்தலாம் என்று அடிப்படையே இல்லாமல் பசப்பிவருகிறார்கள். 'இந்து மதவெறிக் கும்பல்' என்பதைக் கூட நேரடியாகச் சொல்லத் திராணியின்றி 'மதவாத சக்திகள்' எனப் பொத்தாம்பொதுவாகப் பேசுவதுதான் போலிகளின் மதவெறி எதிர்ப்பு.
அணுசக்தி ஒப்பந்தம்,அமெரிக்காவுடன் ராணுவ ஒப்பந்தம் என்று நாட்டை மறுகாலனியாக்கப் படுகுழியில் ஆளும் வர்க்கம் வீழ்த்தி வரும் வேளையில் மக்களைத் திசை திருப்பிடும் மதவெறிப்பிரச்சாரத்தில் மும்முரமாய் இறங்கி இருக்கும் சங்க பரிவாரத்தை வீதியில் இறங்கி எதிர்தாக்குதல் நடத்தி முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் உள்ளோம்.
Related:
No comments:
Post a Comment